தீபாவளிப் பண்டிகை: சென்னைக்கு 12,846 பேருந்துகள் இயக்கம்

1 mins read
e3898f68-0a7c-47d7-9620-d5265f65bad8
கோப்புப் படம் - ஊடகம்

சென்னை: தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சனிக்கிழமை (நவம்பர் 2) முதல் 12,846 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் வசிக்கும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய பத்து லட்சம் பேர் பேருந்து, ரயில்கள் மூலமாக தீபாவளியைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இப்போது சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் பண்டிகைக்கால விடுமுறை நாட்கள் முடிந்துவிடும் என்பதால், அவர்கள் வழக்கம்போல் சென்னைக்கு திரும்புவதற்கு ஏதுவாக சனிக்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, பிற ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகளின் வசதிக்காக 2ஆம் தேதி(சனிக்கிழமை) முதல் 4ஆம் தேதி வரை தினந்தோறும் இயக்கக்கூடிய பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்