மயக்கம்தான் கலக்கம்தான்: குறைந்து வரும் ‘தமிழ்ச்சாயல்’

5 mins read
3436d095-0b28-4d2a-8556-7d204bbf92b1
மதுவுக்கு எதிராக தமிழகப் பெண்களின் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. - படம்: ஊடகம்
multi-img1 of 2

எதிர்வரும் 2030க்குள் தமிழகத்தின் பொருளியல் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர் உயர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்காக சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு நேரில் சென்று முதலீடுகளையும் திரட்டினார்.

அதன் பிறகு தமிழக அரசு நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டது. எனினும், தமிழகம் தனது பொருளியல் இலக்கை நோக்கி தள்ளாடாமல் நடைபோடுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காரணம், தமிழகம் மதுப்பழக்கம் எனும் பொறிக்குள் சிக்கியிருப்பதுதான்.

மது விற்பனையில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் மது விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மொத்த மது விற்பனையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு 45 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. அதாவது, நாடு முழுவதும் மது அருந்துவதில் சரிபாதி பங்கை, இந்த ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் பெற்றுள்ளன.

மது விற்பனையில் நாட்டிலேயே தமிழகம் 13% பங்குடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா (12%), ஆந்திரா (7%), தெலுங்கானா (6%), கேரளா (5%) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியாவில் மதுவிலக்கு என்பது பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் அமலில் உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானம் மற்றும் போதைப்பொருள்களைத் தடை செய்ய வேண்டுமா என அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம்.

தமிழகம் மதுவிலக்கு எனும் முடிவைச் செயல்படுத்த வேண்டும் என்ற முழக்கம் வலுப்பெற்று வருகிறது.

‘ஈரல் கெட்டால் எல்லாம் கெடும்’

‘இன்று மதுவை அருந்துகிறான், நாளை மது அவனை அருந்தும்’ என்பது சத்திய வாக்கு.

மாலை நேர மயக்கமாகத் தொடங்கிய இந்த மதுப்பழக்கம்... கடந்த சில ஆண்டுகளாக முழுநேர பழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

‘ஈரல் கெட்டால் எல்லாம் கெடும்’ என்பது அறிவியல், உடலியல் நிஜம் மட்டுமல்ல… நடைமுறை உண்மையும்கூட!

ஈரல் கெட்டுப்போனால் அது உடனே வெளியே தெரியாது. 95 விழுக்காடு வரை கெட்டுப்போனாலும் இந்த உடலைக் காக்கப் போராடும். முடியாதபோதே வேலை நிறுத்தம் செய்யும். வேலை நிறுத்தம் செய்தால் மீண்டும் இயல்பு நிலைக்கு ஈரலைக் கொண்டு வருவது மருத்துவச் சவால்தான்!

வருமானத்தைப் பெருக்கவே மது விற்பனை செய்யப்படுவதாக அரசு சொல்கிறது. அரசு தர வேண்டிய கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, தனியார் செய்யும் சாராய வியாபாரத்தை அரசுகள் செய்வது அகில உலக அவலம் எனத் தமிழக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

“மதுவை விற்பதற்காக தமிழக அரசு ‘டாஸ்மாக்’ என்கிற அரசு நிறுவனத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு பொங்கல், தீபாவளிக்கும் மது விற்பனைக்கு என இலக்கு வைத்து விற்பது வேதனையின் உச்சம். அதைவிடக் கொடுமை, ஒருவேளை கடந்த ஆண்டைவிட விற்பனை குறைந்தால் டாஸ்மாக நிறுவனம் தனது கடை ஊழியர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அதற்கான விளக்கம் கேட்பதுதான்,” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக நவீன கருவிகளைக் கொண்டு மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான மருத்துவச் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கே குடிப்பழக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலவித சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வருமானத்தைப் பெருக்க மது விற்று, அந்தப் பழக்கத்தால் நோயாளிகளாக ஆகிறவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்ன விநோதம்? என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

அரசு தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள ஆயிரம் வழிகள் உண்டு. தனியார் கொள்ளை லாபம் பார்க்கும் மணல், கல் குவாரிகளை அரசே நடத்தலாம். இதனால் அரசுக்கு வருமானம் அபரிமிதமாய் வருவதுடன் தனியாரின் இயற்கை வள சுரண்டலையும் கட்டுப்படுத்த முடியும். கட்டுமானப் பொருள்களின் விலையும் கட்டுக்குள் இருக்கும்.

படையெடுக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்

இன்று, சென்னை மத்திய எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று பாருங்கள். காலையில் வரும் ஒவ்வொரு ரயிலில் இருந்தும் ஆயிரம் பேர் வீதம் வடமாநிலத்தவர்கள் வந்து, தமிழகத்தில் வேலையில் சேர்கிறார்கள்.

தமிழக கிராமப் பகுதிகளில்கூட வடமாநிலத்தவர் நெல், நாற்று நடுவது முதல் பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். காரணம், குறைந்த சம்பளத்திற்கு கடுமையாக உழைக்கிறார்கள் என்பதுதான்.

ஆனால், உள்ளூர்வாசிகளோ காலையிலேயே மதுக்கடை வாசலில் நிற்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் இருக்கும் உணவுமுறை முதல் கட்டடக் கலை வரை தமிழ்ச்சாயல் குறைந்து கொண்டே வருகிறது.

‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது’

கட்சி அரசியலும் மற்றொரு பக்கம் மதுப்பிரியர்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் மதுப்பழக்கத்தால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக அரசாங்கத்தை எதிர்க்கிறது எதிர்க்கட்சிக் கூட்டணி. ஆனால், அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்போது, புது ஆட்சியாளர்களும் மது விற்பனையை அதிகரிக்கிறார்கள்.

ஆட்சிக்கு யார் வந்தாலும் காட்சி மாறுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் புலம்புவதிலும் கோபப்படுவதிலும் நியாயம் உள்ளது.

பார்க்க அழகாகத்தான் இருக்கும் பாம்புக்குட்டிகள். கொட்டினால்தான் அதன் விஷ(ய)ம் தெரியவரும். மதுவும் அப்படியான மெல்லக் கொல்லும் நஞ்சுதான்.

மது அருந்துவது ஒருவரது தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்த குடிக்கு காசு தேடி, நூறு ரூபாய்க்குக்கூட கொலை, சங்கிலித் திருட்டு என சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும்போது மது பொது விஷயமாகிறது.

‘மது விற்பனையே மாநிலங்களின் வருவாய்’

மாநிலங்களின் கஜானாவுக்கு முக்கிய வருவாயாக மதுவிற்பனை இருப்பதாக ‘லைவ் மின்ட்’ இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மது விற்பனை குறித்தும் அதனால் மாநிலங்களுக்கு வரக்கூடிய வரி வருவாய் குறித்தும், ‘ரிசர்வ் வங்கியின் கூற்று’ எனக் குறிப்பிட்டு, அந்த இணையச் செய்தி ஊடகம் தரவுகளை வெளியிட்டிருக்கிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவிலேயே கோவாவில்தான் ஆகக் குறைவான விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

அங்கு 100 ரூபாய்க்கு விற்பனையாகும் மதுப்புட்டி டெல்லியில் ரூ.134க்கும், கர்நாடகாவில் ரூ.513க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்கள் விலை குறித்தெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை.

மூடப்படும் மதுக்கடைகள்

கடந்த 2002-03ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஏறக்குறைய 3,000-4,000 கோடி ரூபாய்க்கு மட்டுமே மது விற்பனை நடந்து வந்தது. ஆனால், அரசாங்கம் சில்லறை வியாபாரத்தைத் தொடங்கிய பிறகு மது விற்பனை ரூ.44 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

2021-22ஆம் ஆண்டு ரூ.36,013.14 கோடிக்கும் முந்தைய ஆண்டான 2020-21ல் ரூ.33,811.15 கோடிக்கும் மது வகைகள் விற்பனையானதாக பிபிசி தமிழ் ஊடகம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

2023-24ஆம் ஆண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.50 ஆயிரம் கோடியாக இருக்கும் என அரசு எதிர்பார்ப்பதாக நிதித்துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘டெட்ரா பேக்’ எனப்படும் சிறு காகிதக் குடுவைகளில் மது வகைகளை விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான அறிவிப்புக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் திமுக அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

2014ஆம் ஆண்டு தமிழகத்தில் 6,835 டாஸ்மாக் கடைகள் 27 ஆயிரம் பணியாளர்களுடன் இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5,329 கடைகளாகக் குறைந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மேலும் 500 கடைகள் அண்மையில் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்