சென்னை: விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கண்ணும் கருத்துமாக காய்களை நகர்த்தி வருகிறது. ஏற்கெனவே கூட்டணியில் தொடரும் கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையே மீண்டும் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே, கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அந்தக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களமிறங்கிய திமுக, இந்த முறை அதைவிடக் கூடுதலான கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வருகிறது.
கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. - 173, காங்கிரஸ் - 25, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சி -6, ம.தி.மு.க. - 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்தத் தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக. கூட்டணியில் இணைந்தால் அந்தக் கட்சிக்கு 6 தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மநீமவுக்கு 3 தொகுதிகள்
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்துக்கு அப்போது தொகுதிகள் வழங்கப்படவில்லை. ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று கட்சி நிர்வாகிகளைப் போட்டியிட வைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
ஆனால், தி.மு.க. தரப்பிலோ மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் மட்டும் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டுவந்து 2 தொகுதிகளை வழங்குவதற்குப் பரிசீலித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில், ஏற்கெனவே தி.மு.க. கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் இருந்து வரும் கட்சிகள் எல்லாம் இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளன.
காங்கிரஸ் கட்சியோ ஒரு படி மேலே போய், ஆட்சியிலும் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால், ஆட்சியில் கூட்டணிக் கட்சிகள் பங்குபெறுவதை திமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கிடும் பணிகளை முடித்துவிட்டு, பிரசாரப் பணிகளில் முனைப்புக்காட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

