என்டிஏ அரசுக்கு எதிராக மார்ச் 15ல் திமுக கூட்டணிக் கட்சிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

என்டிஏ அரசுக்கு எதிராக மார்ச் 15ல் திமுக கூட்டணிக் கட்சிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

2 mins read
63505150-b2b1-4570-b5e6-4deac202753f
மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் என்டிஏ அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் வரும் மார்ச் 15ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெளியான அறிக்கையில், “மத்திய பாஜக என்டிஏ அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் எரிவாயுக் கலனுக்கும், வணிக ரீதியிலான எரிவாயுக் கலனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

“உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிறு - குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்தக் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்பதால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரிசெய்ய வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.

“ஆனால் மத்திய அரசு தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையைச் சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்குரியது.

“அதோடு தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி, நூறு நாள் வேலைத் திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஓசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது, மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்கத் துடிப்பது, கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மத்திய பாஜக அரசு,” என்று ஸ்டாலின் கூறினார்.

“இப்படி தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் என்டிஏ அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் மார்ச் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

“மேலும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் என்டிஏ அரசுக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறி திமுக அரசுக்கு எதிராக மார்ச் 17ல் என்டிஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்