சென்னை: திமுக கூட்டணியில் தற்போது புதிய கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இணைந்து வருகின்றன. இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடத் தொகுதி கேட்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொகுதிகள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் கூடுதலாக மாநிலங்களவையில் தங்களுக்கு ஒரேயோர் இடமாவது ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்துவதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளும் மாநிலங்களவையில் ஓர் இடமும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, நீண்ட காலமாக திமுக கூட்டணியில் நீடித்துவரும் விசிகவுக்கு குறைந்தபட்சம் 15 சட்டப்பேரவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஆகியவற்றைப் பெற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்தி உள்ளனர்.
எனினும், விசிகவுக்கு ஏழு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் ஒருவேளை மாநிலங்களவையில் இடம் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலத் தேர்தலில் எட்டு இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பத்து நாள்களில் திமுக தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்னும் 10 நாள்களில் முடிவடையும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. இன்னும் 10 நாட்களில், அது முழுமை பெற்று முதல்வரிடம் வழங்கப்படும்.
“திராவிட இயக்கத்தை உண்மையாக நடத்திக்கொண்டிருப்பவர்கள் யார்? திராவிட மாடல் ஆட்சியைத் தரக்கூடியவர்கள் யார்? என்று தமிழக மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது,” என்றார் கனிமொழி.
முஸ்லிம் லீக், மமக கட்சிகளுக்கு தலா 2 இடங்கள்
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் சனிக்கிழமை மாலை கையெழுத்தானது.
முஸ்லிம் லீக் ஏணி சின்னத்திலும், மமக திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளே இவ்விரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கருணாஸ்
சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடப் போவதாக நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட சொல்கிறாரோ அங்கு போட்டியிடத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

