திமுகவும் பாஜகவும் நேரடியாகவே கூட்டணியில் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
அதனால்தான் திமுகவினருக்கு எதிராக சோதனைகள் நடத்தப்படுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 88வது நினைவு நாளை முன்னிட்டு, திங்கட்கிழமை (நவம்பர் 18) திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
“மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறது. ஆளும் கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை? அவர்களுக்கு ரெய்டு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைபடியாது கரம் என்பதல்ல, கப்பம் சரியாகக் கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.
“பாஜக ஆளும் மாநில முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார். திமுகவும் பாஜகவும் நேரடியான கூட்டணியில்தான் உள்ளன,” என்றார் அவர்.
“வ.உ.சி. கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை.
“திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்,” என்று அவர் கூறினார்.
“நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதில் 117 பெண்கள், 117 ஆண்ளுக்கு வாய்ப்புக் கொடுப்போம். நூறு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க இருக்கிறோம்,” என்றார் சீமான்.