விருப்ப மனுக்கள் விற்பனை மூலம் திமுகவுக்கு ரூ.20 கோடி வசூல்

விருப்ப மனுக்கள் விற்பனை மூலம் திமுகவுக்கு ரூ.20 கோடி வசூல்

1 mins read
500f30e9-10cf-4d22-a439-2719643ac092
தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள பேரவைத் தொகுதிகளில் 11,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். - படம்: மக்கள் நேரம்

சென்னை: திமுகவில் விருப்ப மனுக்கள் விற்பனை மூலம் ரூ.20 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. மார்ச் 2ஆம் தேதி வரை மனுக்களை அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள பேரவைத் தொகுதிகளில் 11,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

இம்முறை பொதுத்தொகுதிகளில் போட்டியிடுவோர் ரூ.25 ஆயிரமும் தனித்தொகுதியில் களமிறங்க விரும்புவோர் ரூ.15 ஆயிரமும் செலுத்த வேண்டும் எனத் திமுக தலைமை அறிவித்தது.

அதன்படி அளிக்கப்பட்ட மனுக்கள் மூலம் ரூ.20 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.

இதனிடையே, அதிகமானோர் விருப்ப மனுக்களை அளிக்க ஆர்வம் காட்டியதால், அதற்கான கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

திமுகவில் தன்னை அண்மையில் இணைத்துக்கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி நாயக்கனூர் தொகுதிக்கும் அவரது மகன் ரவீந்திரநாத் (ஆண்டிப்பட்டி), அமைச்சர் வேலு (திருவண்ணாமலை), முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதிக்கும் கடைசி நாளன்று விருப்ப மனுக்களை அளித்தனர்.

“மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். அதனால் மிக அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் விற்பனையாகி உள்ளன,” என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திமுகசட்டப்பேரவைத்தேர்தல்