சென்னை: நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தேசியக் கட்சியான காங்கிரஸ் திமுக முதுகின் மீது ஏறித்தான் பல ஆண்டுகளாக சவாரி செய்து வருகிறது. தற்போது விஜயை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, மாநிலங்களவையில் இடம் என கேட்டு நெருக்கடி கொடுத்தாலும் திமுக தன்பிடியை விடவில்லை.
மாநிலங்களவையில் கூடுதல் தொகுதிகளைத் தரமுடியாது, அப்படித் தந்தாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தரமுடியாது தமிழகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் டெல்லிக்கு அனுப்புவோம் எனத் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்குப் பிறகு, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில், பிற கட்சிகளுக்கான பட்டியலை கிட்டத்தட்ட திமுக இறுதி செய்துள்ளது.
விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு தொகுதி முதல் எட்டு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
விரைவில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாகி உள்ளது.
தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தேமுதிகவுக்கு ஆறு பேரவைத் தொகுதிகளும் மாநிலங்களவையில் ஓர் இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக, விசிக ஆகியவற்றுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. விசிகவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கங்களில் தொகுதி ஒதுக்கக் கோரியுள்ளன. விசிக மாநிலங்களவையில் கூடுதலாக ஓர் இடமாவது தரவேண்டும் என வலியுறுத்துகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில், மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

