சென்னை: நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையே நிலவிவந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்குப் பிறகு காங்கிரசுக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் மாநிலங்களவையில் ஓர இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (மார்ச் 4) இரவு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், தொகுதி உடன்பாட்டில் இருதரப்பும் கையெழுத்திட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தொகுதிப் பங்கீடு மனநிறைவு அளிப்பதாகவும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் கூறினார்.
தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுகள் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள மமக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேமுதிகவுக்கு ஆறு பேரவைத் தொகுதிகளும் மாநிலங்களவையில் ஓர் இடமும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மதிமுக ஆகியவற்றுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்த முடிந்துள்ளது. விசிகவும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கங்களில் தொகுதி ஒதுக்கக் கோரியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
விடுதலை சிறுத்தைக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது. விசிக மாநிலங்களவையில் கூடுதலாக ஓர் இடமாவது தரவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
தேமுதிகவுக்கு ஏற்கெனவே மாநிலங்களவையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சிக்கு ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் எனத் திமுக தலைமை திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும் ஆட்சியில் பங்கு வேண்டும் என வலியுறுத்துவதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் மோதல், பிளவு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், 28 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு மனநிறைவு அடைந்துள்ளது காங்கிரஸ் தலைமை. கூட்டணி உறுதியானதில் இருகட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

