திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும்: கனிமொழி

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும்: கனிமொழி

2 mins read
ea750b56-5b9b-4214-9880-7c5308ddcb7b
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி. - படம்: தினமணி

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நன்முறையில் நடந்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் முடிவுக்குவந்த பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கூட்டணி வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திமுக எம்.பி. கனிமொழியும் புதுடெல்லியில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இரண்டு தலைவர்களின் சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

கூட்டணி குறித்துப் பேசுவதற்காக காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு ராகுல் காந்தி, கனிமொழியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இரு தலைவர்களின் சந்திப்பு சுமூகமாக நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.

திருநெல்வேலியில் மக்கள் திரளாக வந்து மனுக்களை அளித்தனர். அது குறித்துப் பேசிய கனிமொழி, “திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு மனுக்களைத் தருகிறார்கள்.

அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை எங்களிடம் முன்வைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்,” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறதா என்ற செய்தியாளர் கேள்விக்கு, “காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக பல ஆண்டுகளாகத் தடையற்ற, சுமுகமான கூட்டணியில் இருந்து வருகிறது. எங்களுக்குள் எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை. இது வலுவான கூட்டணி என்று கூறினார்.

திமுகவுக்காகக் காத்திருக்கிறோம்: காங்கிரஸ்

திமுகவுடனான கூட்டணி குறித்து, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் திமுகவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம், ஏனெனில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார்.

“தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நவம்பர் மாதம் ஒரு கூட்டணிக் குழுவை அமைத்தோம். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து, கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. அவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்