சென்னை: திமுக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை 77ல் இருந்து 110ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்.
கொள்கை, அமைப்புமுறை, செயல்பாடுகள், உடன்பிறப்புகள் ஆகிய நான்கு அடிப்படைகளைக் கொண்டே திமுக இயங்கி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், “கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில் கழகத்தின் அமைப்புமுறையைக் காலம்தோறும் புதுப்பித்துச் செழுமைப்படுத்தி வருகிறோம்,” என்றார்.
கழகத்தின் 16வது அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கும் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வதற்கும் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 110ஆக அதிகரித்து வரையறுக்கும் அதிகாரம் தலைமைச் செயற்குழுவால் தனக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கழக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள தொகுதிகள் 110 மாவட்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாள்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தலைமைச் செயற்குழுத் தீர்மானங்கள், மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிப் புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


