திருப்பூர்: தமிழகத்தில் தேர்தல் என்று வந்துவிட்டால், திமுகவின் தேர்தல் அறிக்கைத்தான் கதாநாயகனாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், பெண் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகிவிட்டது என்றார்.
“தேர்தலில் எப்போதுமே திமுகவின் தேர்தல் அறிக்கைத்தான் கதாநாயகன், அந்த கதாநாயகனை தயாரிக்கும் பொறுப்பை கனிமொழி எம்பி ஏற்றுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையேற்று தயாரித்த தேர்தல் அறிக்கை முழுமையான வெற்றியைத் தேடி தந்தது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தொடர்பாக மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு, அதை அமல்படுத்தாமல் பெயரளவில் வைத்துள்ளதாக அவர் சாடினார்.
இது, அறுவை சிகிச்சை வெற்றி பெற்ற போதிலும், நோயாளி இறந்துவிட்ட கதையாக உள்ளது என்றும் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 1.39 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்றும், விடியல் திட்டத்தின் கீழ் இதுவரை 900 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர் என்றும் ஸ்டாலின் கூறினார்.
“பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்த அவர், மாநிலம் முழுவதும் புதிய நிறுவனங்களை தொடங்கி 13 விழுக்காடு பெண்கள் தொழில் முனைவோராக மாறி பொருளியலுக்கு பங்களிப்பதாகக் கூறினார்.
“திமுக ஆட்சி தொடர்ந்தால் பெண்களுக்கான திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும். பெண்களுக்கான திமுகவின் சாதனைகளை வீடு வீடாகக் கொண்டு செல்லும் பொறுப்பை பெண்களே ஏற்க வேண்டும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

