25 பெண் வேட்பாளர்களைக் களமிறக்கும் திமுக; சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி

25 பெண் வேட்பாளர்களைக் களமிறக்கும் திமுக; சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி

2 mins read
2c6725dc-0c74-4719-ad1e-d1226e226396
சிற்றூர், மாவட்ட, மாநில அளவில் பொறுப்பில் உள்ள திமுக பெண் நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: வே டு நியூஸ் தமிழ்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 25 பெண் வேட்பாளர்களைக் களமிறக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைப்பு ரீதியாக, திமுக 77 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு பெண் வேட்பாளர் என்ற அடிப்படையில், குறைந்தபட்சம் 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம், பெண்களின் வாக்குகளைக் கவர முடியும் என திமுக தலைமை கருதுவதாகத் தெரிகிறது.

கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பாக தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஆறு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

கீதா ஜீவனும் கயல்விழியும் அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், ஆட்சிக்கு வந்தபின்னர் பெண்களைக் கவரும் விதமாக பல்வேறு திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தியுள்ளது.

இலவசப் பேருந்துப் பயணம், 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதால் இம்முறை பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய முடியும் என திமுக தலைவர்கள் நம்புகின்றனர்.

இதுதொடர்பாக, தேர்தல் உத்தி வகுப்பாளர்களுடன் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்துக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், குறைந்தபட்சம் 30 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சிற்றூர், மாவட்ட, மாநில அளவில் பொறுப்பில் உள்ள திமுக பெண் நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்ப திமுக எம்.பி. கனிமொழி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 30 பேர் திமுக தலைமையிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) முதல் மார்ச் 22ஆம் தேதி வரை திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கனிமொழியும் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்