தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திமுக ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி: அமித்ஷா

2 mins read
a68afb40-ede6-4113-8726-e1488c7bc599
தமிழக மக்கள் திமுகவை தூக்கி எறியக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார் அமித்ஷா. - படம்: ஊடகம்

மதுரை: டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களைப் போல், எதிர்வரும் 2026ஆம் ஆண்டு தமிழகம், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், மதுரை காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்றும் மதுரை மண் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

“தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

“அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நீண்டகால அரசியல் அனுபவம் மூலம் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், தமிழக மக்கள் திமுகவை தூக்கி எறியக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்,” என்றார் அமித்ஷா.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அகற்றப்பட்டு 27 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சி அமைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது என்றும் மோடி அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியைத் திமுக அரசு திசைமாற்றி, மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்கிறது என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.

நடப்பு திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் சட்டவிரோத ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

மதுரையில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களை அமித்ஷா சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்