சட்டமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

விஜய்யின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளி

சட்டமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

2 mins read
5bac1a8d-dfce-4734-9a42-8bd50882aa01
முதல்வர் ச.ஜோசப் விஜய்யின் கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கோரி திமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் ச.ஜோசப் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை வழக்குகள் தொடர்பாக திரு விஜய் பேசிய கருத்துகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்க்காரியா ஆணையம் குறித்து ஏற்கெனவே சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதால், கருத்துகளை நீக்கத் தேவையில்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தீர்ப்பளித்தார். அவரின் இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்றத்தின் நடுவே அமர்ந்து முழக்கங்களை எழுப்பிச் சட்டமன்ற நடவடிக்கைகளை முடங்கச் செய்தனர்.

திமுக கொறடா ஏ.வ.வேலு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு இருவரையும் பேசுமாறு திரு பிரபாகர் அழைப்பு விடுத்தார். இருப்பினும், திமுக உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், தமது தீர்ப்பை மாற்ற முடியாது எனக் கூறிய திரு பிரபாகர், அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவைக் காவலர்கள் அவைக்குள் நுழைந்து குட்டி, துரை சந்திரசேகரன், வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் வேலு, நேரு, தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆர்.நிர்மல்குமார் இடையே நடந்த காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த அமளியால் சட்டமன்ற நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை காலை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
சட்டமன்றம்விஜய்திமுகசபாநாயகர்