சதி வலையில் சிக்காமல் திமுகவினர் மக்களைக் காக்க வேண்டும்: ஸ்டாலின்

2 mins read
d4c6772b-9415-493a-b195-73779ecc90c7
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக நாட்டிலுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்

தமிழகத்தை ஆபத்து சூழ்ந்துள்ளது என்றும் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க திமுகவினர் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க, திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் வரும் 11ஆம் தேதி திருத்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும் தாம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம் என்றும் திரு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சரியான உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை என்றும் இதனால் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் போதுமான கால அவகாசம் தராமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர, அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் தங்களது நிலைப்பாடு என்று திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்