சென்னை: நாடாளுமன்றத் தொகுதி வரையறைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், தொகுதி மறுவரையால் பாதிக்கப்படும் எனக் கருதப்படும் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரி திமுக அமைச்சர்கள் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை நடத்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் கொண்ட குழு, அந்த ஏழு மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று முதல்வர், முக்கியமான அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு கோர உள்ளனர்.
முதற்கட்டமாக, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை ஏற்றக்கொண்ட நவீன் பட்நாயக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார் என்று இருவரும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியும் திமுக எம்பி அப்துல்லாவும் கர்நாடகா செல்வதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, திமுக எம்பி என்ஆர் இளங்கோ தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் என எதிர்கட்சிகள் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. குறிப்பாக, தமிழகம் 8 தொகுதிகளை இழக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து தென்மாநிலங்களை ஒன்றிணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்துச் செயல்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது திமுக.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியும் வலுப்படும் என அக்கட்சித் தலைமை கருதுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.