புதுடெல்லி: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகக் களமிறங்கிய அன்னியூர் சிவா வெற்றிபெற்றது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதால் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக, இதே கோரிக்கையுடன் தேசிய மக்கள் கட்சியின் ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு திங்கட்கிழமை (அக்டோபர் 27) தீர்ப்பளித்தது.
அப்போது மனுதாரர் ராஜமாணிக்கம் இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு முறையாகப் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
எனினும், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி காலமானதையடுத்து அங்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா களமிறக்கப்பட்டார்.

