சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டுகள் அவகாசம் இருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக அல்லாத தேசிய அளவிலான மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சிகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
நீண்டகாலக் கூட்டணியாக இருந்த காங்கிரஸ், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு விஜய் தலைமையிலான தவெகவுடன் கைகோத்தது திமுக தலைமைக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
கடந்த 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் முன்மொழிந்தது முதல், நெருக்கடியான நேரங்களில் எல்லாம் ஆதரவாக நின்ற திமுகவிற்கு இது பின்னடைவாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக, புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்ததுடன், நாடாளுமன்றத்திலும் காங்கிரசுக்கு அருகில் இருந்த இருக்கைகளை திமுக மாற்றிக் கொண்டது.
தற்போது காங்கிரசைப் புறக்கணித்து தேசிய அளவில் மாற்று சக்தியை உருவாக்கும் நோக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. தீவிர அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லியில் ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், கோல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அத்துடன், கரப்பான்பூச்சி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவுடனும் அவர் பேசியதாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மேற்கொண்ட மூன்றாவது அணி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இம்முறை ‘இந்தியா’ கூட்டணியை உடைக்கும் வகையில் திமுக செயல்படுவதாக மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் எதிரியான பாஜகவை விட, துரோகம் இழைத்த காங்கிரசை வீழ்த்துவதே முக்கியம் என்ற கணக்கில் திமுக காய்களை நகர்த்தி வருகிறது.
தேசியத் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள, இண்டியா கூட்டணியிலிருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளைத் தன் தனிப்பட்ட நட்பால் மீண்டும் இணைக்க மம்தா ஒரு பக்கம் முயற்சி எடுத்து வருகிறார்.
கனிமொழியின் இந்த தொடர் சந்திப்புகள் தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2029 தேர்தலுக்குள் இந்த மூன்றாவது அணி சாத்தியமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
