கல்வித் தரத்தை திமுக குறைக்கிறது: அண்ணாமலை

1 mins read
fd5a9468-8471-4b1b-94d9-8b2cfc2ed2b6
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. - படம்: இந்திய ஊடகம்

தென்காசி: தமிழ்நாட்டின் கல்வித் தரத்தைக் குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுவருவதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திரு அண்ணாமலை அந்தக் கருத்தை முன்வைத்தார்.

“தமிழகத்தின் கல்வித் தரத்தைக் குறைக்கும் செயலில் திமுக இறங்கியுள்ளது. கல்வியைத் தவிர எந்த ஆயுதமும் தங்கள் கையில் இல்லை, கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்,” என்றார் அவர்.

“2023ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை. இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஓர் ஆண்டிற்கு ரூ.86,000 செலவு செய்கிறது,” என்று திரு அண்ணாமலை குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 96, குஜராத் மாநிலத்தில் 34 நவோதயா பள்ளிகள் உள்ளன என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது என்று சாடினார்.

இதற்கிடையே, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி மதுபானம் மூலம் வருமானம் வருகிறது. மது விற்பனை இல்லாத குஜராத் மாநிலத்தில் பற்றாக்குறை இல்லாத வரவுசெலவுத் திட்டம் போடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்