சென்னை: கனிமவள கொள்ளைக்கு எதிராகப் போராடுபவர்களை அரசே கைது செய்வதும், கூலிப்படைகள் மூலமாக கொலை செய்வதும் தமிழகத்தில் தொடர்கதையாகி விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு திமுக ஆட்சி மக்களுக்கானதா அல்லது கனிமவள கொள்ளையர்களுக்கானதா என்று கேள்வி எழுப்பினார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி. சமூக ஆர்வலரும் அப்பகுதியின் கபடிக் கழகச் செயலாளருமாக இருந்த அவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, தமிழக எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு ஜெகபர் அலியின் படுகொலை மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது என சீமான் கூறியுள்ளார்.
“திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. கடன் வாங்குவது, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா புழக்கம், டாஸ்மாக் மது விற்பனை, சாலை விபத்துகள் ஆகியவற்றில்தான் தமிழகம் இப்போது இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது.
“நடப்பு ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஏன் தமிழக காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது பெரும் கொடுமை,” என்று சீமான் சாடியுள்ளார்.
மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.