இறுதிக் கெடு விதித்த திமுக: சிதம்பரத்தைக் களமிறக்கிய காங்கிரஸ்

இறுதிக் கெடு விதித்த திமுக: சிதம்பரத்தைக் களமிறக்கிய காங்கிரஸ்

2 mins read
9266c4c0-23a5-4731-9914-060f7301ed93
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். - கோப்புப்படம்: மாலை மலர்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

எந்த நேரத்திலும் கூட்டணி முறிந்துபோகலாம் என்றும் சுமுக உடன்பாடு காணப்படும் என்றும் இரு வெவ்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியானதே தவிர, இருதரப்பில் இருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) இரவு 8 மணி வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சி மேலிடம் அறிவிக்கவில்லை என்றாலும், செவ்வாய்க்கிழமை காலை அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு எந்தவிதமான கெடுவையும் திமுக விதிக்கவில்லை என்றார்.

காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் விரைவில் நல்ல தகவல் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரு ப.சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்த்தார். முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை அவர் காணொளி மூலம் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, ராகுல் காந்தி எம்பி, சோனியா காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகத் தெரிகிறது.

மேலும், இதேபோல் காங்கிரஸ் மேலிடப் பிரமுகர் கிரிஷ் சோடங்கர், கே.சி. வேணுகோபால் ஆகியோரையும் சிதம்பரம் தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, காங்கிரசுக்கு 29 சட்டப்பேரவைத் தொகுதிகளும் மாநிலங்களவையில் இரண்டு இடங்களும் ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் தரப்பில் 41 இடங்கள் ஒதுக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் இத்தகவல் தெரிவித்தது.

இதனிடையே, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், காங்கிரஸ் கேட்பது வேறு, திமுக சொல்வது வேறாக உள்ளது என்றார்.

“கூட்டணி விவகாரத்தைச் சுமூகமாக முடிக்கவே முதல்வர் ஸ்டாலின் விரும்புவார். காங்கிரசார் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்,” என்றார் இளங்கோவன்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அதிகபட்சமாக, மார்ச் 4ஆம் தேதி காலைக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டும் என காங்கிரசுக்கு திமுக தலைமை கெடு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்