மதுரை: தமிழகத்தில் திமுக ஆதரவு அலை வீசுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 48 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது.
இதில் மத்திய அரசைக் கண்டித்தும் இதர விவகாரங்கள் குறித்தும் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்கும் பொதுக்குழுதான் மதுரையில் தற்போது நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“கடந்த அதிமுக,– பாஜக கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்குச் சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். மத்திய பாஜக அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம்.
“திமுக கூட்டணி வலுவாக தொடர்கிறது எனில் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்துச் செயல்படுவதுதான். நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்,” என்றார் ஸ்டாலின்.
மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருவதாகக் குறிப்பிட்ட அவர், தாம் முன்பே கூறியபடி, ‘எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது’ என்றார்.
எப்போதுமே தமிழ்நாட்டை டெல்லி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாது என்றார் அவர்.
“தமிழ்நாட்டில் ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களைச் செய்திருக்கிறோம். அத்திட்டங்களால் தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ இரண்டரைக் கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“நானும் என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது என்று தொண்டர்கள் நினைப்பதுதான் திமுக என்ற இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படைக் காரணம்,” என்று ஸ்டாலின் மேலும் கூறினார்.
பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்த திமுகவினர் பத்தாயிரம் பேருக்கு தடபுடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சைவம், அசைவம் என விருந்து களைகட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மதுரை சென்றடைந்த பின்னர் டிவிஎஸ் நகரில் உள்ள தனது மூத்த சகோதரர் மு.க.அழகிரி இல்லத்திற்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அழகிரி குடும்பத்தாரிடம் நலம்விசாரித்த பின்னர், இருவரும் சிறிது நேரம் தனியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டார் ஸ்டாலின்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்துப் பேசியது, திமுகவினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
தேர்தல் நெருங்குவதால், அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு ஏதேனும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது.