சென்னை: கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில், இந்தியாவில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை அளவில் திமுக முதல் இடத்தில் உள்ளதாக அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த நிதியாண்டில் மட்டும் குறைந்தபட்சம் ரூ.20,000க்கும் அதிக மதிப்புள்ள தொகையை அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன. கட்சிகள் நன்கொடையாகப் பெற்றட மொத்தத் தொகை ரூ.1,051 கோடியை எட்டியுள்ளது.
திமுக பெற்ற தொகை ஏறக்குறைய ரூ.365 கோடியாகும். இதன்மூலம் தமிழகத்தில் அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளில் திமுக முதலிடம் பிடித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.185 கோடி பெற்றுள்ளது. ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.140 கோடியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.83 கோடியும் அதிமுக ரூ.63 கோடியும் பிஜூ ஜனதாதளம் ரூ.60 கோடியும் நன்கொடையாகlg பெற்றுள்ளன.
முந்தைய 2023-2024ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.347.69 கோடி. 2024-2025ல் அத்தொகை மூன்று மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. நன்கொடைகளின் எண்ணிக்கையும் 2,861இல் இருந்து 5,297ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு நிதியாண்டில் தனிநபர் அல்லது நிறுவனங்களிடமிருந்து ரூ.20,000க்கும் மேல் பெறும் நன்கொடைகளின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதில் பெருநிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு ஏறக்குறைய ரூ.227.61 கோடியிலிருந்து ரூ.644.93 கோடியாக அதிகரித்துள்ளது. அதில் ‘புருடென்ட் எலக்டோரல்’ அறக்கட்டளை அதிகபட்சமாக ரூ.434 கோடியும் ‘டைகர் அசோசியேட்ஸ்’ ரூ.160 கோடியும் வழங்கியுள்ளதாக சங்கத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


