தர்மபுரி: பாமகவில் பிளவை ஏற்படுத்த திமுக முயற்சி செய்கிறது என்றும் அது தோல்வியில்தான் முடியும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் நடந்த பாமக மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக நம்பவைத்து கழுத்துறுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் வெற்றி பெற முடியாது என்பது திமுகவுக்கு தெரிந்திருக்கிறது என்றும் அதனால்தான் மிகப் பெரிய துரோகத்தை திமுக அரசு செய்துகொண்டிருக்கிறது என்றும் அன்புமணி சாடினார்.
வன்னியர் சமூகத்தினர் ஒருவர்கூட திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், இட ஒதுக்கீடு தொடர்பாக, திமுக செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது என்றார்.
“எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற, திமுக முயற்சி செய்கிறது.
“என் மனத்தில் நிறைய இருக்கிறது. ஆனால், கட்சி நிர்வாகிகளைப் பார்த்ததும் மனப்பாரம் குறைந்துவிட்டது.
“திமுக ஆட்சியை அகற்றுவோம்,” என்று அன்புமணி மேலும் கூறினார்.
கடந்த சில வாரங்களாக பாமகவில் உட்கட்சிப் பூசல் வலுத்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பாமக இளையரணித் தலைவர் நியமனம் தொடர்பாகவும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், பாமக உட்கட்சிப் பூசல் தொடர்பாக, திமுக மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார் அன்புமணி.