திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் புதிய உத்தி

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் புதிய உத்தி

3 mins read
4ccbda96-f60c-4291-92d9-551759aa33ce
முதல்வர் மு.க. ஸ்டாலின். திமுக தலைமை, கூட்டணிக் கட்சிகளுக்கு சாதகமாக தேர்தல் கணக்கை வகுத்துள்ளதாகத் தெரிகிறது. - கோப்புப் படம்: நியூஸ்மினிட்

சென்னை: தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவின் தேர்தல் கணக்கு மாறுகிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி திருப்திப்படுத்த அது விரும்புவதாக தினமணி நாளேடு வெளியிட்ட கணிப்பு தெரிவிக்கிறது.

2019 மக்களவைத் தோ்தலில் பெற்ற வெற்றியின் அடிப்படையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு மக்களவைக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகளை 2021ல் திமுக ஒதுக்கியது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது திமுக தலைமையில் உருவான கூட்டணி அப்படியே தொடா்கிறது.

ஆனால், எதிா்வரும் தோ்தலில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி), முக்குலத்தோா் புலிப்படை (கருணாஸ்), கொங்கு இளைஞா் முன்னணி (உ.தனியரசு), தமிழா் தேசம் கட்சி (கே.கே.எஸ்.செல்வக்குமாா்), எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் புதிதாகச் சோ்ந்துள்ளன.

இதனால் அணியில் இணைந்துள்ள புதிய வரவுகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, திமுக தனக்குரிய தொகுதிகளைக் குறைத்துக் கொள்வதுடன், ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொகுதிகளைக் குறைக்கவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று காங்கிரஸ் கட்சியில் சில மூத்த தலைவா்கள் குரல் எழுப்பியதால் அக்கட்சிக்குரிய எண்ணிக்கை தற்போதைக்கு குறையாது எனத் தெரிகிறது.

இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருடன் கடந்த வாரம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் அதில் காங்கிரசுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியையும் ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதலாக ஒரு தொகுதி அல்லது மாநிலங்களவை உறுப்பினா் பதவி என்பது பேச்சுவாா்த்தையில் உள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது விசிக.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால், அவை தலா இரண்டில் மட்டுமே வென்றன. அவற்றுக்கு இம்முறை தலா ஒரு தொகுதி குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் வென்றது. இம்முறை தனி சின்னத்தில் போட்டியிடுவதில் அக்கட்சி உறுதி காட்டினால் 3 தொகுதிகளும், திமுக சின்னத்தில் போட்டியிட்டால் 5 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதற்கான அறிகுறி திமுக தரப்பில் இருந்து காட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் மற்றும் புதிதாக கூட்டணியில் இணைந்த தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ், கே.கே.எஸ்.செல்வக்குமாா், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னத்தில் தொகுதிகளை ஒதுக்கி தனது தொகுதிகள் பலத்தை தக்கவைக்கலாம் என்பது திமுக தலைமை வகுக்கும் உத்திகளில் முக்கியமானது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த முறை ஏணி சின்னத்தில் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் (வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூா்) தோல்வி அடைந்தது. இம்முறை அதற்கு இரண்டே போதும் என்ற வகையில் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது. உடன்பாடு எட்டப்பட்டால் ஆம்பூா், திருச்சி கிழக்கு, அறந்தாங்கி அல்லது ராமநாதபுரம் இவற்றில் ஏதேனும் 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்.

ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமையிலான கொமதேக உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அதற்கு இம்முறை 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம்.

கடந்த தோ்தலில் உதயசூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்ற மனிதேய மக்கள் கட்சிக்கு இம்முறையும் அதே ஒதுக்கீடு வழங்கப்படலாம்.

கடந்த முறை 173 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தொகுதிகளைச் சோ்த்தால் 188 தொகுதிகளாகும். இம்முறை நேரடியாக 165 தொகுதிகள் வரையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளையும் சோ்த்து மொத்தம் 175 தொகுதிகள் எனவும் திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளில் போட்டியிட்டாலும் கடந்த தோ்தலைவிட கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறுவதே திமுகவின் கணக்கு.

குறிப்புச் சொற்கள்