வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் செல்லும் பரிசுப் பொருள்கள்

வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் செல்லும் பரிசுப் பொருள்கள்

2 mins read
708c9249-60c1-4d4a-a943-a98a6b636a02
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் படங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட இந்த  ‘ஹாட் பாக்ஸ்’கள் தற்போது பழநி தொகுதியின் பேசுபொருளாகியுள்ளன. - படம்: இந்து தமிழ் திசை

பழநி: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பழநி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களைக் கவரும் விதமாக திமுக சார்பில் உணவுகளைச் சூடாக வைத்திருக்கும் ‘ஹாட் பாக்ஸ்’கள் விறுவிறுப்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் சிறப்புப் பரிசு என்ற பெயரில், திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று இந்தப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ஏறக்குறைய 2.37 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களைத் தேடிப்பிடித்து, அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்றுக்கொண்டு இந்தப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அண்ணா, கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட இந்த ஹாட் பாக்ஸ்கள், தற்போது தொகுதியில் பேசுபொருளாகியுள்ளன.

இந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றவர்களிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே சமயம், ஹாட் பாக்ஸ் இன்னும் கிடைக்காத சிலர் திமுக நிர்வாகிகளைத் தேடிச் சென்று கேட்டு வாங்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

பொதுமக்களுக்கு மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளுக்கும் பிரத்தியேக இல்லப் பயன்பாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது பழநி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் இ.பெ. செந்தில்குமார், வரும் தேர்தலில் மீண்டும் இங்கேயே போட்டியிட்டு ‘ஹாட்ரிக்’ வெற்றிபெறத் திட்டமிட்டுள்ளார்.

கட்சி மேலிடம் அவரை திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட வலியுறுத்தி வரும் சூழலில், தனது பலத்தைக் காட்டவும் வாக்காளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் செந்தில்குமார் தரப்பு இந்த அதிரடி விநியோகத்தில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்