திமுகவின் ரூ.6 லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை

திமுகவின் ரூ.6 லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை

2 mins read
81a406ae-0a12-479e-8fc8-36bc4ea3ee6e
சென்னையில் தேர்தல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் என பாமக தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அந்த அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, பணியாளர் நியமன ஊழல், ஒப்பந்த ஊழல், பணியிட மாற்ற ஊழல், மது வணிகத்தில் வரி ஏய்ப்பு எனப் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னையில் மூன்று சிறப்பு நீதிமன்றங்களும் மதுரை, கோவையில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படும். 5 லட்சம் பேருக்கு அரசு வேலை, தனியார் துறை, சுயவேலை வாய்ப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கப்படும்.

“முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் அன்புமணி.

பாலர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்றும் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் அனைவருக்கும் பட்டப்படிப்பு கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் பாமக தெரிவித்துள்ளது.

“மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது சிற்றுண்டி வழங்கப்படும். ஏழை தொழிலாளர்களின் நலன் கருதி, பத்து ரூபாய்க்குச் சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொரியல், ஊறுகாயுடன் நிறைவான மதிய உணவு வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும்,” என்றார் அன்புமணி.

குறிப்புச் சொற்கள்