சென்னை: தமிழகத்தை அடுத்து, புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வலுத்து வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரசை இழிவாகப் பேசும் போக்கு நீடிப்பது நல்லதல்ல என்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 26.35% வாக்குகளைப் பெற்றதாகவும் திமுக வேட்பாளர் நஸீம் வெறும் 8.19% வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தமது எக்ஸ் தளப் பதிவில் மாணிக்கம் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 34.5% வாக்குகளுடன் முதலிடம் பிடித்தார்.
காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் திமுக நான்காம் இடத்தையும் பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், காங்கிரசைவிட குறைவான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு கட்சி, கூட்டணிக்கு தலைமை வகிக்க முயற்சி செய்வதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், அண்மையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால் புதுவையில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பதில் திமுக, காங்கிரசுக்கு இடையே மறைமுக மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே தமிழகத்திலும் திமுகவைச் சீண்டும் வகையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார் மாணிக்கம் தாக்கூர்.
தற்போது அவரது சமூக ஊடகப் பதிவு புதுவை அரசியல் களத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

