சென்னை: இந்திய அரசுடன் கண்மூடித்தனமான மோதலை விரும்பவில்லை எனத் தமிழக முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து ஆற்றிய உரையின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழக அரசுக்கு எப்போதுமே மாநில வளர்ச்சிதான் முக்கியம் என்றார் அவர். எதிர்க்கட்சிகள் பேசுவதுபோல் தாம் ஏதோ படப்பிடிப்பில் இருந்து நேராக வந்து முதல்வர் பதவியை ஏற்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த 1990கள் முதல் பல்வேறு வழிகளில் மக்களுக்குத் துணை நின்றதாகத் தெரிவித்தார்.
தமது திரைப்படங்களில் முடிந்த அளவு ஊழல் ஒழிப்பு, சமூகநீதி, கல்வி, அரசியல் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறியதாகவும் அதற்காக தனது படங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் முதல்வர் விஜய் மேலும் சுட்டிக்காட்டினார்.
“தவெக யாருடைய ‘பி’ அணியும் அல்ல. நான் எப்போதும் தூய்மையான மக்களின் அணி. ‘நீட்’ தேர்வு கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் நம் நிலைப்பாடு,” என்றார் முதல்வர் விஜய்.
மாநில உரிமைகளையும் அரசியல் ரீதியிலான கொள்கைகளையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், இதில் தமிழக மக்களுக்கும் ஆதரவு இயக்கங்களுக்கும் எந்தச் சந்தேகமும் தேவையில்லை என்றார்.
ஆட்சிக்கு வந்த 40 நாள்களில் சிங்கப்பெண் அதிரடிப்படை, மதுக்கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி, அம்மா உணவகங்கள் புதுப்பிப்பு, பத்திரப்பதிவுத் துறை பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் பட்டியலிட்டார்.
“எனக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்கிறார்கள். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்கிற கொள்கையைக் கொண்டவர்கள் நாம்.
“தற்போது மத்திய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கையளவில் நேரெதிராக நின்றாலும், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை.
“சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் செய்வது அவதூறு அரசியல்,” என்றார் முதல்வர் விஜய்.
விஜய் பேசிய பின்னர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

