சேலம்: எடப்பாடி அருகே ஒரு சிறுவனைப் பல நாய்கள் துரத்தித் துரத்திக் கடிக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி, கவுண்டன்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சில வளர்ப்பு நாய்கள் உள்ளன. அவற்றைக் கட்டிப்போடாததால் தெருவில் செல்வோரைக் கடிப்பதாகப் புகார் எழுந்தது.
நாய்களின் உரிமையாளரிடம் இதுகுறித்து தெரிவித்தபோதும் பலன் இல்லை.
கட்டிப்போடாததால் நாய்கள் பலரைக் கடித்துக்குதற, இதைப் பற்றிக் கேட்ட ஆறுமுகம் என்பவர் தாக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விவகாரம்குறித்து நகராட்சி நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, ஒரு சிறுவனை வளர்ப்பு நாய்கள் துரத்திக் கடிக்கும் காணொளி, மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், கும்பகோணம் மாநகராட்சியின் 14வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 73 வயதான அய்யப்பனும் நாய்க்கடிக்கு ஆளானார்.
புதன்கிழமையன்று (ஜூன் 11) தனது வார்டில் ஆய்வு மேற்கொண்ட அவரை, திடீரென அத்தெருவில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் சூழ்ந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். நாய்களிடம் இருந்த தப்பித்து ஓடிய அவரை, அவை விடாமல் துரத்தின.
அப்போது வேகமாக பாய்ந்த ஒரு நாய், அய்யப்பனின் காலைக் கடித்தது. வலியால் அலறித்துடித்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.