கூட்டணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: விஜய்

கூட்டணி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: விஜய்

2 mins read
8b6b0498-6bff-4507-88bf-2b6be627d2ef
நோன்புத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டார் விஜய். - படம்: தினமாலை

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், குறிப்பிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்திகள்தான் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற நோன்புத்திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் அடுத்து தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றார்.

அரசியலில் அடியெடுத்து வைத்தது முதல், தன்னைப் பற்றி பல்வேறு அவதூறுகளைச் சிலர் பரப்பி வருகின்றனர் என்றும் ஆனால் அவர்களுக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்றும் விஜய் தெரிவித்தார்.

இறுதியில், விஜய் அந்தக் கூட்டணியில் சேருகிறார், இந்தக் கூட்டணியில் இணைவார் என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி எதிர்த்தரப்பினர் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்கியதாகவும் எனினும், மதச்சார்பற்ற சமூகநீதி என்பதில் தவெக உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. தமிழகத்தில் தவெக தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளோம்.

“முதல் மாநாட்டில்கூட நான் குறிப்பிட்டதுபோல் அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை. அதற்கான பேச்சுவார்த்தைக்கு அறவே வாய்ப்பில்லை,” என்றார் விஜய்.

யார், எத்தகைய அவதூறுகளைப் பரப்பினாலும், தவெகவினர் அவற்றை நம்பக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், இறைவன் அருளால் நிச்சயமாக இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

அண்மைய சில நாள்களாக கூட்டணி தொடர்பாக வெளியான செய்திகளைக் கண்டு தவெகவினர் குழப்பம் அடைந்திருக்கக்கூடும் என்றும் எனவே, கூட்டணி குறித்து வெளிப்படையாக, தெளிவாக தற்போது விளக்கம் அளித்துள்ளதாகவும் விஜய் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்