சென்னை: ‘தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) முதல் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்களில் தீவிரமாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், தெற்கு மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் வடக்கு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை நகரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்புநிலை திரும்ப, போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் நடந்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

