சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்களும் சென்னையில் மட்டும் 39.52 லட்சம் வாக்காளர்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், சென்னையில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதாக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில், இறந்தவர்கள் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு புகார்களைத் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
“இதன் மூலம், பொதுமக்கள் தங்களது பெயர், குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
“வாக்காளர் உதவி மையம் அல்லது இணையம் வழி பெயர், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றைச் செய்துகொள்ளலாம்,” எனத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.