மதுரை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் அம்மாநில அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட காலமாகத் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் களம் காணத் தயாராகி வருகிறார்.
அவர் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி தனது புதிய கட்சியின் பெயர், கொள்கை, கொடி ஆகியவற்றை சசிகலா அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
சசிகலாவின் அரசியல் நகர்வுகள்
அண்மையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்,”என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களைத் தொடர்ந்து, சசிகலா அரசியலிலிருந்து விலகி இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

