சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறையினர் ஏறக்குறைய எட்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பிரகாஷ், கானா நாட்டைச் சேர்ந்த ஜான்(38 வயது) ஆகிய இருவரும் போதைப்பொருள்களை விற்பனை செய்ததற்காகக் கைதாகினர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின்போது, திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பலமுறை கொகைன் போதைப்பொருளை வாங்கிப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைதாகினர்.
கைதான ஜானுக்கு அனைத்துலக போதைப் பொருள் கும்பலுடன் நேரடித் தொடர்பு உள்ளது. அவரிடம் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, பிரதீப் ஆகியோர் இடைத்தரகர்கள்போல் செயல்பட்டு, போதைப் பொருள்களை வாங்கி திரைத்துறைப் பிரபலங்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.
ஜானின் வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தன் கையில் எடுத்துள்ளது.
முதற்கட்டமாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு விசாரணைக்கு முன்னிலையாகக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி ஸ்ரீகாந்த் நேரில் முன்னிலையாகவில்லை.
நடிகர் கிருஷ்ணா அக்டோபர் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தனது வங்கிக் கணக்கு ஆவணங்களுடன் வந்தார். இதையடுத்து, அவரிடம் எட்டு மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடந்தது. அப்போது அவரிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
போதைப்பொருள் முகவரான ஜானுடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது, திரையுலகில் வேறு யார், யாருக்குப் போதைப்பொருள் பழக்கம் உள்ளது என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணா விரிவாகப் பதில் அளித்துள்ளார் என்றும் மேலும் சிலர் வழக்கில் கைதாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

