சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதை நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பிரதீப் குமார் தந்த வாக்குமூலம் அடிப்படையில் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முற்பட்டனர்.
ஆனால், கிருஷ்ணா கைப்பேசியை அடைத்து வைத்துவிட்டு தலைமறைவானார். இரண்டு நாள்களாகக் காவல்துறை தேடி வந்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் கிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிடிபட்ட நடிகர் கிருஷ்ணாவை அங்கு ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரத்தப் பரிசோதனையில் கிருஷ்ணா கொக்கைன் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தைபோல் கிருஷ்ணாவையும் காவல்துறை கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.