சென்னை: வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியான ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாக இந்து தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது கூறப்படுகிறது.
சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜாஃபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இவ்வழக்கை கையில் எடுத்த மத்திய அமலாக்கத்துறை பணப்பரிமாற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளிகளான திரைப்பட இயக்குநர் அமீர் உள்ளிட்ட சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை 300க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் அதில் ஜாஃபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர் சலீம் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.