‘விஜய்’ சேலைகளுக்கு மிகுந்த வரவேற்பு

‘விஜய்’ சேலைகளுக்கு மிகுந்த வரவேற்பு

1 mins read
e1c935c7-98e1-4ed8-a8de-6d3456daac0c
‘தவெக விஜய்’ சேலையுடன் ஸ்ரீ லக்‌ஷணா சாரீஸ் உரிமையாளர் மேனகா. - படம்: ஸ்ரீ லக்‌ஷணா சாரீஸ்

பாரம்பரியக் கைத்தறி நெசவையும் நவீன மின்னிலக்கத் தொழில்நுட்பத்தையும் இணைத்து தமிழ்நாட்டின் சேலம் மாநகரில் உள்ள ‘ஸ்ரீ லக்‌ஷணா சாரீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘தவெக ஜோசப் விஜய்’ சேலை, தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தமிழகத்தின் புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். 'ஸ்ரீ லக்‌ஷணா சாரீஸ்’ நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்கள் மேனகாவுக்கும் சங்கருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதனால், விஜய்யின் முகத்தைச் சேலையில் மின்னிலக்க முறையில் கொண்டுவரத் திட்டமிட்டதாக அவர்கள் கூறினர்.

“தவெகவின் அதிகாரபூர்வப் பாடலைப் பின்னணி இசையாகக் கொண்டு, சேலையை இன்ஸ்டகிராமில் காணொளியாகப் பதிவிட்டோம். அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியான குறுகிய காலத்தில் 1.3 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது,” என்றார் மேனகா.

தமிழகத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சேலையின் வடிவமைப்பு தயாரானது. அதனால், 1,000 சேலைகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குத் தயாரிக்க முடிந்தது என்று மேனகா சொன்னார்.

காணொளி பரவியதால் தவெக தொண்டர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் சேலைக்கான இணைய முன்பதிவுகள் குவிந்தன. எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையான அந்தச் சேலை தற்போது தமிழகத்தில் பிரபலமாக உள்ளது என்று மேனகா குறிப்பிட்டார்.

இணையத்தில் காணொளி பரவியதால் சேலைக்கான இணைய முன்பதிவுகள் குவிந்தன.
இணையத்தில் காணொளி பரவியதால் சேலைக்கான இணைய முன்பதிவுகள் குவிந்தன. - படம்: ஸ்ரீ லக்‌ஷணா சாரீஸ்
குறிப்புச் சொற்கள்