தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் பணி தொடக்கம்

1 mins read
9db29553-1305-4044-90cd-9ce7b0a9ed3a
கடந்த 2022ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 241 குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக மக்கள் வாழ்வுத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறியும் பணி தொடங்கி உள்ளது.

சென்னையில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிறப்புப் பதிவகத்தைத் தொடங்கி வைத்த அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2022ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 241 குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

2023, 2024ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்பு குறித்து, ஓரிரு ஆண்டுகளில் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

“தமிழக அரசுடன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, இந்திய குழந்தைகள் ரத்தவியல், புற்றுநோயியல் குழு, இந்திய குழந்தைகள் புற்றுநோயியல் மையம் ஆகியவை ஒருங்கிணைந்து, புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளை கணக்கிட்டு வருகிறது.

“சென்னை மக்கள் தொகை அடிப்படையிலான, குழந்தைப் பருவ புற்றுநோய் பதிவேடு தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் எவ்வளவு குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது கண்டறியப்பட உள்ளது.

“இந்தியாவிலேயே குழந்தைப்பருவ புற்றுநோய் கண்டறியும் பணி, தமிழகத்தில்தான் தனித்திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில், ஈரோடு, திருப்பத்துார், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், புற்றுநோய் பரிசோதனை நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து, 27 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பரிசோதனை துவங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்