தருமபுரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஆளும் திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்ததால் அதிர்ச்சியில் மற்ற கட்சிகள் உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
கட்சியின் முக்கியத் தலைவர்கள் மக்களைச் சந்திக்க தொகுதி தொகுதியாகச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதேபோல மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் தங்கள் அணியில் இணைக்க போட்டி போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக, பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் அதிமுகவில் இணைத்து அதிரடி அரசியல் மேற்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த தருமபுரி மாவட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.