புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மீண்டும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இச்சந்திப்பின்போது தம்முடன் வந்த அதிமுக மூத்த தலைவர்களை, வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே சென்றது பல்வேறு கேள்விகளுக்கும் ஊகங்களுக்கும் வித்திட்டுள்ளது.
ஒன்றுபட்ட அதிமுகவாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பம் என எடப்பாடியிடம் அமித்ஷா வலியுறுத்தியதாகவும் டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், டிடிவி தினகரன் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். அவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், டெல்லி புறப்படுவதற்கு முன்னர் இருவரும் நேரில் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் பழனிசாமி. இதுவரை அவர் 150க்கும் மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார்.
இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு, அவர் டெல்லி புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது.