சென்னை: தமிழ் நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு மலிவு விலையிலும் பொதுமக்களுக்குத் தள்ளுபடி விலையிலும் மருந்துகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வியும் மருத்துவமும்தான் திமுக அரசின் இரண்டு கண்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் திகழவும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்யவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மருந்தகத் திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் திரு ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசினார்.
“மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் மக்களின் சுமையைக் குறைப்பதற்காக முதல்வர் மருந்தகங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன.
“முதல்வர் மருந்தகங்களை அமைக்க அரசு சார்பில் மானியம், கடன் உதவியும் வழங்கப்படுகிறது.
“திமுக அரசு சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டுதான் முதல்வர் மருந்தகங்கள்.
“மாவட்டம் தோறும் உள்ள மருந்துக் கிடங்குகளில் இருந்து மூன்று மாதத்திற்குத் தேவையான மருந்துகள் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“48 மணி நேரத்தில் மருந்துகளை முதல்வர் மருந்தகத்திற்கு அனுப்பி வைப்பதற்குத் தேவையான வாகன வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“மருந்துகளைக் கையாள்பவர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
“முதல்வர் மருந்தகங்களால் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
“கொரோனா காலத்தில் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களைக் காப்பாற்றினோம்.
“மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் காலத்தை மாற்றி மக்களைத் தேடி மருத்துவத்தை கொண்டு சென்றோம். மக்களுக்கான செலவுகளைச் செய்வதில் தமிழக அரசு கணக்கு பார்ப்பதில்லை.
“மத்திய அரசின் நெருக்கடி இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தமிழ்நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

