சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வருகிற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் பணியில் கிட்டத்தட்ட 14 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கையாளுவது மற்றும் வாக்குப்பதிவு தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
2வது கட்டப் பயிற்சி வகுப்பானது சில மாவட்டங்களில் வருகிற சனிக்கிழமையும், சில மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை அரசு ஊழியர்களைவிட ஆசிரியர்கள் தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். தமிழகத்தில் தற்போது பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 21ஆம் தேதிவரை இந்தப் பணி தொடர உள்ளது.
பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வு முடிவடைந்துவிட்டதால், அதற்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணியும் தொடங்கப்பட இருக்கிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஒரு நாள்கூட விடுமுறை இன்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.
ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தல்கள் கோடை விடுமுறைக் காலத்தில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதாகவும் வரும் காலங்களிலாவது இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு நெட், செட் பி.எச்.டி. ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஜவகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

