நாமக்கல்: மத்திய கிழக்கைச் சூழ்ந்துள்ள போர்ப் பதற்றம் காரணமாக நாமக்கல் பகுதியில் கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாள்தோறும் ரூ.5 கோடி இழப்பு ஏற்படுவதாக கோழிப்பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோழிப்பண்ணைகளுக்குப் பெயர் பெற்ற நாமக்கல் வட்டாரங்களில் நாள்தோறும் ஏறக்குறைய ஏழு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் முட்டை உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும், நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் 80 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் காரணமாக கப்பல் மூலம் முட்டைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விமானம் மூலம் முட்டை ஏற்றுமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.
எனவே, நாள்தோறும் தேங்கும் முட்டைகள் அனைத்தும் தற்போது உள்ளூர் சந்தைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கடந்த மாதம் ரூ.5.40ஆக இருந்த ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை தற்போது ரூ.4.05ஆக உள்ளது. ஒரு முட்டைக்கான உற்பத்திச் செலவு ரூ.4.50ஆக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கொள்முதல் விலை ரூ.4.50ஆக இருப்பதால், ஒரு முட்டைக்கு 50 காசு போல் இழப்பு ஏற்படுவதாகவும், நாமக்கல் வட்டாரத்தில் கோழிப்பண்ணைத் தொழிலில் நாள்தோறும் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

