சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான பத்து மீட்டர் ‘ஏர் ரைஃபிள்’ துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக, பத்து மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் அணிப் பிரிவிலும் இளவேனில் இடம்பெற்ற இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம் ஒரே நாளில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்று அவர் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனிலின் இந்த வரலாற்று வெற்றியைப் பாராட்டி தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
“வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
“அனைத்துலக அளவில் தொடர்ந்து சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வரும் இளவேனிலின் இந்தச் சாதனை, விளையாட்டுத் துறையில் காலடி எடுத்து வைக்கும் பல இளம் வீராங்கனைகளுக்குப் பெருமிதத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அமைந்துள்ளது,” என்று திரு விஜய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, துப்பாக்கிச் சுடும் வீரர்கள் தொடர்ந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள்.
“இது அவர் வென்ற இரண்டாவது பதக்கம் என்பது இந்த வெற்றியை இன்னும் சிறப்பானதாக்குகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்,” என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
