உலகம் முழுவதும் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
மொனாக்கோ, ஜப்பான், பிரான்ஸ், கிரீஸ், சுவீடன், பின்லாந்து எனப் பல உலக நாடுகள் முதியோர் நலனில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, எதிர்வரும் 2050க்குள் அந்நாட்டில் முதியோர் எண்ணிக்கை 20 விழுக்காடாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
2046ஆம் ஆண்டில் இந்தியாவில் 15 வயது வரையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைவிட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இரண்டாம் இடத்தில் தமிழகம்
இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது என்பதுடன், மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் (CSO) தரவுகளின்படி, தமிழகத்தில் முதியோர் விகிதம் அதிகரித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
2031ஆம் ஆண்டுக்குள், தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 18.2 விழுக்காட்டினர் முதியவர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள முதியோரில் 40 விழுக்காட்டினர் ஏழ்மை நிலையில் இருப்பது வருத்தம் அளிக்கும் தகவல் எனில், அவர்களில் 18.7 விழுக்காட்டினர் எவ்வித வருமானமும் இன்றி வாழ்நாள்களைக் கடத்துகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதால், நாட்டின் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஓய்வூதியம் பெறும் 20 லட்சம் முதியோர்
இந்நிலையில், அடுத்த தலைமுறைகளை உருவாக்கி வழிகாட்டிய மூத்தோருக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, முதியோர் ஓய்வூதியத் திட்டம், காப்பீட்டுத் திட்டம், நிதி-திறன் மேம்பாட்டுத் திட்டம் எனப் பலவிதமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
முதியோர்க்கு ரூ.200, விதவைகளுக்கு ரூ.300 என ஆக அதிகமாக ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது.
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் வீடு தேடி ‘ரேசன்’ பொருள்களைக் கொண்டு சேர்க்கும் திட்டம் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஏறக்குறைய 20 லட்சத்துக்கும் மேற்பட்ட முதியோர் பயனடைகின்றனர்.
தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பை அதிகரிக்க, காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் தனியாக வசிக்கும் முதியோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, நாள்தோறும் காவல்துறையினர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கின்றனர்.
இதனால் வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களின் பிள்ளைகள், உறவினர்கள் நிம்மதியாக இருக்க முடிகிறது.
முதியோர் அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மனச்சோர்வைத் தகர்க்க பயிற்சி
தமிழகத்தில் முதியோர், விதவைகளில் மூன்றில் ஒருவருக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியமாகக் கொடுக்கப்படுகிறது.
தமிழக முதியோரில், ஏறக்குறைய 74 விழுக்காட்டினர் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
இதை மனத்திற்கொண்டு அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உரிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
60 வயதைக் கடந்துவிட்டதால், மூப்படைந்ததால் ஒருவரது வாழ்க்கை முடிந்துவிடாது. குறிப்பாக, அவர்களுக்கு நிதியுதவியும் சமூகப் பாதுகாப்பும் நிச்சயம் தேவைப்படும்.
இதற்கேற்ப, சிலபல திட்டங்களை இந்திய மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள் செயல்படுத்தி வந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்று ஒருதரப்பினர் கூறுவதைக் கேட்க முடிகிறது.
மேலும், மனச்சோர்வை நீக்கும் அரசாங்கம், முதியோரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதனுடன் சேர்ந்துள்ளது.
தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையத்தை உடனடியாக அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளார் மூத்த பெருமக்கள் நல இயக்க நிறுவனரான ஆ.சங்கர்.
பிள்ளைகள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெற்றோர், சொத்துகளை அபகரித்து நிர்க்கதியாக்கப்பட்ட முதியோர்க்கு சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியரே விசாரணை நடத்தி தீர்வுகாண முடியும்.
எனினும், பெரும்பாலான சம்பவங்களில் காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.
சாதனைப் பாட்டி கிட்டம்மாள்
“என்னதான் அரசாங்கம், சமூகத்தின் ஆதரவு இருந்தாலும், குடும்பத்தாரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை என்பது முதியோரின் மனச்சோர்வையும் சுமையையும் அதிகரிக்கவே செய்கிறது.
“அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு மூதாட்டி கிட்டம்மாள் நல்ல உதாரணமாக விளங்குகிறார்,” என்கிறார் சமூக ஆர்வலரான அருண்.
82 வயதான கிட்டம்மாள் குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, தமது சமூக ஊடகப் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த கிட்டம்மாள், தள்ளாத வயதிலும் பளுதூக்குவதில் சாதனை படைத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார் கிட்டம்மாள். முன்னதாக, பல்வேறு மாநிலப் போட்டிகளிலும் அவர் சாதித்துள்ளார்.
தனது சொந்த ஊரில் நாள்தோறும் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை சர்வசாதாரணமாகத் தூக்கிச் செல்வாராம். மேலும், குறைந்தது 25 குடங்கள் குடிநீர் சுமந்து செல்வதும் இவரது வாடிக்கை.
“எனவே, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். எனக்கு எப்போதும் வயதான உணர்வே ஏற்பட்டதில்லை.
“எனது பேரன் ரோஹித் (16 வயது) என்னுடனே தங்கி, பளுதூக்கும் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் அவர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு பேரனின் உடற்பயிற்சிக் கூடத்தில் நானும் புதிய நுணுக்கங்களைக் கற்றேன்,” என்கிறார் கிட்டம்மாள்.
முதியோர் மூலையில் முடங்க வேண்டியவர்கள் அல்லர். முழுத் திறனையும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தால் சாதிக்கக் கூடியவர்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

