தேர்தல் களம்: இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களின் வரலாற்றுப் பயணம்

தேர்தல் களம்: இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்களின் வரலாற்றுப் பயணம்

2 mins read
f89ea7a7-1191-4735-a5fb-6b1c09d56ca6
ஜெயலலிதா - கருணாநிதி. - படம்: தினமணி

சென்னை: தமிழகத் தேர்தல் வரலாற்றில் மாபெரும் இரு கட்சிகளான அதிமுக, திமுகவின் தேர்தல் சின்னங்கள் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளன.

ஜெயலலிதாவின் ‘234’ சாதனை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து நின்று 37ல் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

அந்த வெற்றி அளித்த துணிச்சல் காரணமாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வேட்பாளர்களைக் களம் இறக்கினார் ஜெயலலிதா.

அவற்றில் 227 இடங்களில் அதிமுகவும் ஏழு இடங்களில் கூட்டணிக் கட்சிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டன.

இந்த வரலாற்று முயற்சியில் 135 இடங்களைப் பிடித்து அதிமுக ஆட்சியைத் தக்கவைத்தது.

1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். அதன்பிறகு, முதல்முறையாக 1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 200 தொகுதிகளில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டனர்.

பின்னர், 1980ல் 177 தொகுதிகளிலும், 1984ல் 155 தொகுதிகளிலும் அதே சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் அதிமுக (ஜெ) அணி எனவும், ஜானகி எம்ஜிஆர் தலைமையில் அதிமுக (ஜா) அணி எனவும் அக்கட்சி பிளவுபட்டது. அதன் காரணமாக 1989 தேர்தலில் அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, அதிமுக ஒன்றுபட்டது.

அதனைத் தொடர்ந்து, 1991 முதல் 2011 வரை 140 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவின் ‘உதயசூரியன்’ பயணம்

1949ல் தொடங்கப்பட்ட திமுக, 1957ல் முதல்முறையாக 117 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. அன்றுமுதல் இன்றுவரை அதே சின்னத்தில் அக்கட்சி தேர்தல்களைச் சந்தித்து வருகிறது.

1967ல் அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தபோது 174 இடங்களில் உதயசூரியன் களம் கண்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையின்கீழ், 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிகபட்சமாக 230 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத் தேர்தல் வரலாற்றில் முத்திரை பதித்தது.

கூட்டணி அரசியலுக்கு மத்தியிலும், நன்கறிந்த சின்னங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இரு கட்சிகளும் காட்டிய உறுதி, தமிழக அரசியலின் பலமாக இன்றும் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்