சென்னை: தேர்தல் வாக்குப்பதிவுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் மறைமுகத் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி ஒருவார இடைவெளிக்குள் இரண்டு முறை தமிழகத்துக்கு வருகைதர இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மார்ச் 1, 6ஆம் தேதிகளில் திரு மோடி தமிழகத்தில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
மார்ச் 1ஆம் தேதி மதுரையிலும் மார்ச் 6ஆம் தேதி வேலூரிலும் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படும் என்றும் பிரதமருடன் கூட்டணிக் கட்சிகள் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

