தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: உயர்நீதிமன்றம்

2 mins read
81194f63-ea4b-4737-9cd2-6f5a4e0aef67
சென்னை உயர்நீதிமன்றம். - படம்: இணையம்

சென்னை: அதிமுக உட்கட்சிப் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருந்தது.

அந்தத் தடையை நீக்கவேண்டும் என்று கூறி, தேர்தல் ஆணையம், ஓ.பி.ரவிந்தரநாத் ஆகிய தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடைபெற்றது.

அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை (பிப்ரவரி 12) தீர்ப்பளித்தது.

அதிமுக உட்கட்சி பிரச்சினையைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என திரு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தலாம், சட்டப்படி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என நீதிபதிகள் கூறினர். ஏற்கெனவே, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பின் எதிரொலியாக, இரட்டை இலை சின்னத்தை திரு பழனிச்சாமிக்குத் தரக்கூடாது என்று வலியுறுத்தி தரப்பட்டுள்ள மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் திரு பழனிச்சாமிக்குக் கட்சிக்குள் நெருக்கடி உருவாகும் என்று நம்பப்படுகிறது. ஏற்கெனவே கட்சிக்குள் திரு செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் அவருக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு அதிமுகவுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்